அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Friday, November 23, 2007

வெள்ளிவிழா ட்ரைவர்...!

தலைப்பு குறிப்பிடும் வெள்ளிவிழா ஆசாமி நாந்தேன்....ஆரம்பத்துலயே சொல்லீர்றேன்,இது ஒரு தற்பெருமை பதிவு...இதுக்கு மேல ரிஸ்க் எடுத்து படிக்கிறது உங்கபாடு.....

என்ன பண்றது எல்லாம் ஒரு வெளம்பரந்தான்.....ஹி..ஹி

மொத மொதலா வண்டி ஓட்ட ஆரம்பிச்சி இப்ப இருவத்தி அஞ்சு வருசமாச்சு..அதை கொண்டாடத்தான் இந்த பதிவு!

பண்ணிரெண்டு வயசுல ஏதோ தைரியத்துல அப்பாவோட அம்பாஸிடர ஸ்டார்ட் பண்ணி ஓட்றேன் பேர்வழின்னு காம்பவுண்ட் சுவர்ல மோதி சுவர் இடிஞ்சி, பூத்தொட்டியெல்லாம் நொறுங்கி, ஹெட்லைட் கண்ணாடி சுக்கல் சுக்கலாக, அதற்கு கொஞ்சமும் குறையாமல் அப்பாவினால் டின் கட்டப்பட்டதுதான் நமது அரங்கேற்றம்.

அன்னிக்கு ஆரம்பிச்ச கார் பித்து இன்னிக்கும் ப்ஃரெஷ்ஷா இருக்கு!...கொஞ்சம் கூட கொறயல...அன்னிக்கு அப்பா அடிச்சப்ப என்ன பெரிய்ய காரு, நான் பெரிய ஆளாகி நாலு கார் வாங்குவேன்னு அன்னிக்கு வச்ச வைராக்கியம்...ஹி..ஹி..இப்ப நிஜம்.

கார்களின் மீதான ஈர்ப்பு எப்போது எதனால் துவங்கியது என நினைவில்லை, ஆனால் கார்களை பற்றிய விவரங்களை சேகரித்து வைப்பதும், நண்பர்கள் மத்தியில் நுணுக்கங்களை வாய்கிழிய பேசி படங்காட்டுவதில் ஒரு போதை இருந்ததாகவே நினைத்தேன்....நினைக்கிறேன்.

முதல்முதலில் சொந்தமாய் கார்வாங்கிய போது எனக்கு சுத்தமாய் மகிழ்ச்சியே இல்லை, காரணம் சொன்னால் டென்சனாவீர்கள்....மொத மொதல்ல போயும் போயும் ஒரு சின்ன கார போய் வாங்கறோமேன்னு ரொம்பவே ஃபீல் பண்ணினேன்...

ஹி..ஹி..என்ன செய்றது அப்போதைக்கு மாருதி800 தான் ஒரே புதிய கார்...அப்புறம் ஆண்டொன்று போனால் வயதொன்று போவது மாதிரி கார்கள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன.

மறக்கமுடியாத சில கார் அனுபவங்களென்றால்....

வீட்டுக்குத்தெரியாமல் எத்தனையோ நாட்கள் கொடைக்கானலுக்கும், ராமேஸ்வரத்துக்கும் நண்பர்க்ளுடன் சுற்றிய நாட்கள்...எத்தனை பேர் தனுஷ்கோடியில் உள்ள ஆளரவமற்ற கடற்கரகளில் நடு இரவில் படுத்துக் கிடந்திருப்பிர்க்ள்....பேரிரைச்சலோடு பேய்த்தனமாய் வீசியெறியும் அந்த கடற்கரையில் பௌர்னமி இரவுகளில் பேசிக்களிக்கும் போது கூட தூரத்தில் சாலையில் தனியே நிற்கும் அந்த அம்பாஸிடரின் அழகு....

சென்னை மதுரைக்கு இடையில் எத்தனை முறை போய் வந்திருப்பேன் என கணக்கே இல்லை, நினைத்த மாத்திரத்தில் கிளம்பிவிடுவேன்,....அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் மருத்துவமனையில் அனுமதி என்கிற செய்தி கேட்டு வேறெந்த நினைவும் வராது மதுரைக்கு பறந்தது இன்றைக்கும் நம்பமுடியாத பயணம்,எப்படி போனேன் என இன்னமும் நினைவில்ல்லை...அம்மா..அம்மா...அம்மா மட்டுந்தான் நினைவில் இருந்தது. வெறும் ஆறு மணி நேரத்தில் மதுரையை அடைந்திருந்தேன்.

ஒரு காலத்தில் அதிதீவிரமாய் ச்சாட்டிக் கொண்டிருந்த காலத்தில் திருச்சியை சேர்ந்த ஒரு பெண் அமெரிக்காவில் செட்டிலானவர், நெம்ப க்ளோஸ்...ஹி..ஹி...திருச்சிக்கு போகும் போது எனக்காக கொஞ்சநேரம் பாலத்தில் வண்டியை நிறுத்தி நின்று அந்த காவிரிக் காற்றை ஸ்வாசித்து விட்டு போ என்கிற அன்புக்கட்டளை, இப்போது அவர் தொடர்பில்லாவிட்டாலும் ஆறேழு வருடங்களாய் அந்த தோழியில் ஏக்கத்தை நிறைவேற்றியே வந்திருக்கிறேன்...இனியும்.....

ஒரு முறை திருப்பூரில் தொழில் நிமித்தமாய் சுற்றிக்கொண்டிருந்த போது அப்போது புதிதாய் சந்தைக்கு வந்திருந்த மிட்சுபிஷி லான்சர் காரை வைத்துக்கொண்டு டெஸ்ட் ட்ரைவ் பண்ணச் சொல்லி இம்சை பண்ணிய விற்பனை பிரதிநிதியுடன் கோயமுத்தூர்வரை டெஸ்ட் ட்ரைவ் பண்ணி அவரை கதற்விட்டதும்.....பின்னர் அந்த வண்டியை டெலிவரி எடுத்தபோது அந்த மேளாளரிடம் என்ன செய்வீர்களோ தெரியாது, இந்த வண்டி விற்றதற்கான ஊக்கத் தொகை அந்த திருப்பூர்காரர்களுக்கு கிடைத்தாக வேண்டுமென அடம்பிடித்ததும்,ஊக்கத்தொகை கிடைத்ததை தொலைபேசியில் அவருடன் பேசி உறுதி செய்ததும் சந்தோஷத் தருணம்.

எத்தனை நாளைக்குத்தான் கார் ஓட்டுவது என எண்ணி ஆவடி HVFல் ஏலத்துக்கு வந்த ஒரு ராணுவ ஜீப்பை ஏலத்தில் எடுத்து நிறைய செலவு பண்ணி ஆறேழு மாதம் சுற்றியது ஒரு அனுபவம்.சும்மா சொல்லக் கூடாது அது குதிரை, வீட்டில் பலத்த எதிர்ப்பு வரவே விற்க வேண்டியதாயிற்று.

தெரிந்த ஒருவரிடம் இருந்த டிசைனர் ஜீப் இருந்தது, அதை எப்படியும் வாங்கிவிட வேண்டுமென ஆசைப்பட்டேன்...நடிகர் அஜீத் குமார் என் ஆசையில் மண்ணை போட்டார்...ஹி..ஹி...

என் அப்பாவுடன் காரில் போவது மட்டும் இன்றைக்கும் அலர்ஜியான விஷயம்...ஹி..ஹி..பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு ட்ரைவ் பண்ணுவார்....அதாவது ஏன் இந்த கியர்ல போறே,இப்படி ஓட்டு, எதுக்கு இத்தனை வேகம்..னு இம்சையாக்கிருவார்...இதுல பெரிய சோகம் என்னனா...யாராவது பொண்ணுங்க அவங்க பாட்டுக்கு போனாலும்...இவர்...டேய்..வேடிக்கை பார்க்காம நேர பார்த்து வண்டிய ஓட்டுன்னு மிரட்டுவார்....அவர் இப்படிச்சொல்லும் போது கார்ல இருக்கிற எல்லாரும் சிரிச்சிருவாங்க...எனக்கு பத்தீட்டு வரும்...ஹி..ஹி...

இப்படி நிறையவே பட்டியலிடலாம்....

சில அதிபயங்கர விபத்துக்களை சில அடி தூரத்தில் கண்டதும், துடிக்கத் துடிக்க உயிர் போவதை கையாலாகமல் பார்த்ததும் உண்டு. மயிரிழையில் மிக மோசமான விபத்துக்களில் இருந்து தப்பியியுமிருக்கிறேன். இருந்தாலும் காரோட்டுவது ஒரு வகையான தவமாகவே தெரிகிறது. தனியே காருக்குள் அது எனக்கான உலகம் என்கிற ஈர்ப்பும், அது தரும் நிறைவும் அனுபவித்தால் மட்டுமே புரியும் உணர்வுகள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலில் ஏற்பட்ட மிக மோசமான சரிவினால் கடன்களையும், கமிட்மெண்ட்களையும் தீர்க்க கையிலிருந்த எல்லாவற்றையும் விற்றுத் தீர்த்த நிலையில் காரை மட்டும் விற்க மனது வரவில்லை...ஒரு கட்டத்தில் காரையும் விற்றாக வேண்டிய சூழல்.... கவச குண்டலத்தை இழந்த கர்ணனை போல...என்னுடைய பலமெல்லாம் போய்விட்டதை போன்று உணர்ந்த நாளது.

மலிவான காரொன்றை வாங்கலாமென தீர்மானித்தாலும், செகண்ட் ஹேண்ட் கார் வாங்க மனமொப்பவில்லை....டாட்டா இண்டிகா வாங்கலாமென்றால் முன்பணம் கட்டக்கூட கையில் காசில்லை...பதினைந்து நாட்கள் ஆட்டோவில் காலந்தள்ளினேன்..என்னுடைய சுற்றமெல்லாம் ஆளுக்கு இரண்டு கார்களாவது வைத்திருந்தனர்....யாரும் என்னிடம் கேட்கவில்லை...நானும் யாரிடமும் போகவில்லை.

ஒரு வழியாய் பணம் புரட்டி 95% கடனில் டாட்டா இண்டிகாவை புக் பண்ணினேன். காரை டெலிவரி எடுக்கப் போக வேண்டும், கையில் ஆட்டோவிற்கு கூட காசில்லை....அதற்கு ஆறுமாதத்திற்கு முன்னால் 400க்கும் அதிகமானோர் பணிபுரிந்த நிறுவனத்தின் முதலாளி....கோடிக்கணக்கில் விற்றுவரவு செய்து கொண்டிருந்தவன்.முழுத் தொகையும் ஒரே செக்கில் கொடுத்து கார் வாங்கிய திமிரோடு இருந்தவன்.

ஹைகமாண்ட் கொடுத்த ஐநூறு ரூபாயுடன் டெலிவரி எடுக்க ஆட்டோவில் போன அந்த பயணம் வலிநிறைந்தது, என்றைக்கும் மறக்க்காது....அந்த பயணத்தின் போது தோன்றிய சிந்தனைகளே இன்றும் வழிநடத்துகிறது என நினைக்கிறேன்....இடறி விழுதல் யாருக்கு சாத்தியமே...இடறி விழுவதால் ஒரு போதும் சிங்கம் நரியாகிவிடாது....நான் இன்னமும் சிங்கம்தான்...நிதானித்து சிலிர்த்தெழ அவகாசமிருக்கிறது...இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை...இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டே போனேன்.

ஐந்து வருடங்கள் கழித்து இன்றைக்கு என்னிடம் நாலு கார்கள் இருக்கிறது....இது அதிகம்தான், தேவையில்லைதான்...ஆனாலும் ஒரு வெறி...என்னை நிரூபித்துக் காட்டிய வெறி....எனக்கு பிடித்ததற்காய் ஒரு டொயோட்டா இன்னோவாவும், ஹைகமாண்டுக்கு பிடித்த மாருதி ஸ்விஃப்ட், நம்ம ஜுனியர்க்கு பிடித்ததற்காய் ஒரு மாருதி வேகன் ஆர்...இது போக என் கஷ்டத்தில் கூட இருந்த என் இனிய டாட்டா இண்டிகா.

எனக்கு பெட்ரோல் கார்கள் சுத்தமாய் பிடிப்பதில்லை....அவையெல்லாம் பெண்கள் ஓட்டத்தான் லாயக்கு என நினைத்துக் கொண்டிருக்க்கிறேன்...டீசல் வண்டிகள்தான் Manlyயானவை, அவைதான் என் ஃபேவரைட்...குதிரை மாதிரி இருக்கவேண்டும்.என்னுடைய அனுபவத்தில் அத்தகைய உணர்வினை தந்த ஒரே வண்டி Opel Astraதான்....

அநேகமாய் இந்திய சந்தையில் உலாவரும் அத்தனை வண்டிகளையும் ஓட்டியாயிற்று,ஸ்கொடா மட்டுமே பாக்கி...

இப்போது அடுத்த கட்டமாய் வெளிநாட்டு கார்களை ருசிபார்க்கும் ஆவல் எட்டிப் பார்க்கிறது.அதே சமயத்தில் எத்தனை நாள்தான் அடுத்தவன் செய்யற கார்ல போறது, நம்ம கார நாமளே செஞ்சி ஓட்டணும்னு ஒரு ஆசை இருக்கு, சீக்கிரத்துல வேலை ஆரம்பிக்கணும் ...ஹி..ஹி...விடமாட்டம்ல....

(கொஞ்சம் ஓவராவே ஃபிலிம் காட்டீட்டேன்னு நினைக்கிறேன்...ஹி..ஹி...ஏதோ சின்ன பையன் தலைகால் தெரியாம‌ ஆடறான்னு பெரிய மனசோட மன்னிச்சிருங்க....)

2 comments:

said...

//
இடறி விழுதல் யாருக்கு சாத்தியமே...இடறி விழுவதால் ஒரு போதும் சிங்கம் நரியாகிவிடாது....நான் இன்னமும் சிங்கம்தான்...நிதானித்து சிலிர்த்தெழ அவகாசமிருக்கிறது...இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை...
//
:-)))

said...

//இடறி விழுதல் யாருக்கு சாத்தியமே...இடறி விழுவதால் ஒரு போதும் சிங்கம் நரியாகிவிடாது....நான் இன்னமும் சிங்கம்தான்...நிதானித்து சிலிர்த்தெழ அவகாசமிருக்கிறது...இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.//

மிக மிக காலதாமதமாக பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்க. மேற்கூறிய வரிகள் என்னை மிக பாதித்தவை, எனக்கு கஷ்டம் வரும் காலங்களில் இத்தகைய வரிகளை சொல்லிக்கொள்வேன்.

உங்கள் பதிவு அதுவும் கார்கள் பற்றிய பதிவு மிக நன்று.

நானும் தங்களை போல கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எங்கள் குடும்பத்திலேயே முதலாவதாக வாங்கியுள்ளேன்.

என்னால் முடிந்தது பியட் பாலியோ வாங்கி உள்ளேன். அதுவும் பழையதுதான் ஏனென்றால் எனக்கு அந்த மாடல் மிக பிடிக்கும்.

அடுத்து ஒரு கான்டசா வாங்கி மாறுதல்கள் பல செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது.

லான்சர் அருமையான கார்....

எனது அடுத்த ஆசை பியட் லீனியா

கண்டிப்பாய் வாங்கி விடுவேன்.