அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Thursday, January 31, 2008

நான் - மீன் - பறவைகள்

இது ஒரு ஒன்னரை வருசத்துக்கு முந்தைய கதை, நம்ம மௌண்ட் ரோடுல அறிவாலயத்துக்கு அதாங்க சன்/கலைஞர் டீவிக்கு எதிர்த்த வரிசையில அலங்கார விளக்குகள் விக்கிற கடைகள பார்த்திருப்பீங்க...அன்னிக்கு எனக்கும் கொஞ்சம் விளக்கு வகையறா வாங்க வேண்டியிருந்ததால போனேன்...நம்ம கெட்ட நேரம் வண்டி நிறுத்த இடமில்லை...என்ன கொடுமையிதுன்னு யோசிச்சப்ப எதிர்த்தாப்புல ஒரு கவர்மெண்ட் ஆஃபீஸ் இருந்துச்சி, அந்த பக்கம் போகையில பார்த்திருக்கேன்...ஆனா அது என்ன ஆஃபீஸ்னு கவனிச்சதுல்ல, சரி போனா போவுது....அப்டீக்கா அந்த காம்பவுண்ட்ல கொண்டுபோய் வண்டிய சேஃப்பா விட்டுட்டு வருவம்னு உள்ள போனேன்.

வண்டிய நிறுத்தீட்டு இறங்கும்போது ஒரு செக்யூரிட்டி ஓடி வந்தார், எந்த ஆஃபீஸ் யாரை பார்க்க போகணும்னு கண்டிப்பா கேட்டார்...அடாடா,இங்கியும் நிறுத்த விடமாட்டாய்ங்க போலருக்கேன்னு யோசிச்சப்ப எதுத்தாப்ல,மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகம்னு இருந்துச்சி....ஹி..ஹி..மண்டைக்குள்ள வெளக்கெறிய...சீரியஸா அங்கதான் போவனும்னு சொன்னேன். திருப்தியான செக்யூரிட்டி அங்க ரிசப்சன்ல உங்க பேர எளுதீட்டு போய் பாருங்கன்னு சொன்னார்....

சரி...அப்டிக்கா போற மாதிரி போய்ட்டு நழுவீருவோம்னு போனா அந்த ரிசப்சன்ல இருக்கற ஆளு நம்மள பார்த்துட்டார், என்ன விசயம், யாரப்பாக்கனும்னு கேக்க இது என்னடா வம்பா போச்சுன்னு அவர் பின்னால இருந்த போர்ட்ட பார்த்தேன்...பார்த்தா நூர்ஜகான்ற பேர் மட்டுந்தான் பளீர்னு தெரிஞ்சது.சரி சொல்லி வைப்பமேன்னு நூர்ஜகான் மேடத்த பார்க்கணும்னு சொன்னேன்.அவர் சரி இதுல எழுதுங்கன்னு சொன்னார்....என்னடா இது வம்பா போச்சேன்னு எளுதீட்டே யோசிச்சேன்....சரி அப்டிக்கா உள்ள போய்ட்டு வெளிய வந்துருவோம்னு நினைச்சிட்டு இருக்கும் போதே அந்தபக்கம் வந்த ஒரு பியூன்கிட்ட சார் மேடத்த பார்க்க வந்திருக்கார் கூட்டிட்டு போன்னு அதிர்ச்சி கொடுத்தார்.

மேடமா...ன்னுட்டு போர்ட்ட திரும்ப பார்த்தா, அந்தம்மா மீன் வளத்துறையில இனை இயக்குனர்....ஆஹா புள்ளையார் புடிக்க குரங்கா போச்சேன்னு நினைச்சிட்டு, சரி சமாளிப்போம்னு போனேன், அடுத்த ஐந்தாவது நிமிசத்துல அந்த அம்மா முன்னால உக்கார வச்சிட்டாங்க...ரொம்ப எளிமையா இருந்தாங்க, ....என்ன விசயம், நான் உங்களுக்கு என்ன பண்ணனும்னு கேட்டாங்க, அதுக்குள்ள நமக்குள்ள இருந்த டுபாக்கூர் வெளிய வந்து...மேடம் இந்த கலர்பிஃஷ் ப்ராஜெக்ட் பண்ணலாம்னு யோசிச்சிருக்கேன்.அது விசயமா விவரம் கேக்கத்தான் வந்தேன்னு அள்ளி விட்டான்.

இப்ப என்ன பண்ணீட்டு இருக்கீங்கன்னு கேட்டாங்க...சொன்னேன், ஏன் இதுல உங்களுக்கு ஆர்வம்னு கேட்டாங்க...எவனுக்கு இதுல ஆர்வம்னு மனசுக்குள்ள நினைச்சிட்டு என்னவோ வளத்தா மீன்தான் வளக்கனும்னு வைராக்கியமா இருக்கற மாதிரி அள்ளிவிட்டேன். அடுத்த அரைமணி நேரம் நன்னீர் மீன்கள்(Freshwater fish) பத்தி பாடமே நடத்தீட்டாங்க...பின்ன இருவது ஏக்கர்ல கலர்மீன் வளக்க ஆசைப்படுறேன்னு சொன்னா என்னை எம்புட்டு பெரிய யாவாரியா நெனச்சிருப்பாங்க....

நீங்க சொல்றதும் சரிதான் மேடம்...அப்ப கலர்மீன் ப்ராஜெக்ட்ட நன்னீர் மீன் வளர்க்கிற ப்ராஜெக்ட்டா மாத்தீரலாம்னு பெரிய மனசு பண்ண அந்தம்மாவுக்கு அநியாயத்துக்கு சந்தோஷம். அப்ப தீவுத்திடல்ல பொருட்காட்சி நடந்துட்டு இருந்துச்சா, அவங்க Field officers எல்லாம் அங்க போய்ட்டாங்க, அந்த அம்மா அநியாயத்துக்கு சாரி கேட்டாங்க...அடுத்த பத்து நாளைக்கு அவங்களால எனக்கு ஹெல்ப் பண்ண முடியாதுன்னு ரொம்ப ஃபீல் பண்ணினாங்க, ஹி..ஹி..எனக்கே கஷ்டமா போச்சு.பரவாயில்ல மேடம் எதாவது ஃபார்ம் இருந்தா சொல்லுங்க நான் முதல்ல போய் பார்க்கிறேன். பத்து நாள் கழிச்சி வந்து உங்கள பார்க்கிறேன்னு சொல்ல அவங்களுக்கு திருப்தி.

கீழே தரைத்தளத்தில் நூலகம் ஒன்னு வச்சிருக்காங்க, அங்க போங்க உங்களுக்கு அட்ரஸ் தரச்சொல்றேன்னு சொன்னாங்க....ர்ரொம்ப ஃபீல் ஆகி அவங்களுக்கு தேங்ஸ் சொல்லீட்டு கீழ வந்தேன். அவங்க பூண்டி ஏரிகிட்ட இருக்கிற இரண்டு Seed farm அட்ரஸ் கொடுத்து போய் பாக்க சொன்னாங்க...தேமேன்னு வாங்கீட்டு வந்தேன்....இப்படியும் கவர்மெண்ட் ஆஃபீஸ் இருக்குமான்னு ஒரே ஆச்சரியமாபோச்சு....

பதிவு கொஞ்சம் நீளமாயிருச்சோ.....சரி இதப்படிச்சிட்டு சொல்லுங்க...அடுத்து என்னா நடந்துச்சின்னு எளுதறேன்....

Thursday, January 17, 2008

காட்டாறு....இம்புட்டு போதுமா!

ர்ர்ரொம்ப நாளா பதிவெழுதாம சுத்திட்டு இருக்கேனா...அதான் இன்னிக்கு எழுதியே தீரணும்னு ஒத்தக்கால்ல நின்னு(ச்ச்சும்மா ஒரு பேச்சுக்கு!) எழுதிட்டு இருக்கேன்...அப்படி என்ன விசேசம்னு கேப்பீங்களே....இருக்கே, அது என்னான்னு பதிவோட கடைசில சொல்றேன்....

நம்ம காட்டாறு மொக்கை பதிவு போடச்சொன்னாங்க....அல்வா குடுத்தாச்சி....ஹி..ஹி..ஆத்தா கோவமாய்ட்டாங்க, அடுத்து சான்ஸ் பிடிச்ச பதிவு எழுதனும்னு சொன்னாங்க....ஒரே கல்லுல பல மாங்காய் அடிச்சிரலாம்னு இந்த பதிவுலயே அதையும் கலந்து கட்டி அடிச்சிர்றேன்....

மொதல்ல புத்தகசந்தை பத்திச்சொல்லனும், கடந்த ரெண்டு வருசமா தனிப்பதிவு போட்டேன், இந்த தடவை சில பத்திகள்தான்...தனிப்பதிவு எழுதற அளவுக்கு அங்க ஒண்ணுமில்லை....போன தடவைய விட இந்த தடவை நெறய ஸ்டால், என்ன பிரயோசனம் பாதி சுத்துறதுக்குள்ள பெரிசுங்க எல்லாம் டயர்டாய் உக்கார இடம் கிடைக்காதன்னு தேடிட்டு இருக்கறத பார்த்தேன். ஒவ்வொரு வரிசைக்கும் இடையில உக்கார்ரதுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கலாம்.

போன தடவை வந்ததுல பாதிக்கும் குறைவாத்தான் கூட்டம் வந்திருக்கும்னு நினைக்கிறேன்.சரியான விளம்பரம் இல்லை,நிறைய கடைகளில் புத்தகங்கள் ஓழுங்காய் காட்சிப்படுத்தப் படவில்லை. ஏதோ காய்கறிகடையில் குவித்து வைத்திருப்பது போல குவித்து வைத்திருந்தனர். இதற்கு மான்புமிகு மஹாஜனமும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை.

இந்ததடவையும் நான் வருவது தெரியாததால் அழகிய தமிழ் மகள்களின் கூட்டம் மிகக்குறைவே, வர வர அழகிய பெண்களிடையே புத்தகம் படிக்கும் வழக்கம் குறைந்து வருகிறதோ...என்னவோ..ஹி..ஹி..அந்த வகையில் இந்த வருடமும் Mission Failure என்றுதான் சொல்லவேண்டும்... ஹைகமாண்ட் வழக்கம் போல நிறைய புத்தகம் வாங்க நானும் வழக்கம் போல ரயில்வேஸ்டேஷன் போர்ட்டராய் கூட நடந்தேன்.ஆச்சர்யமாய் நான் இந்த வருடம் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை.ஹி..ஹி...போன வருசம் வாங்கினதுலயே பாதிக்குமேல பிரிக்கலை...இந்த லட்சணத்துல புதுசா என்னத்த வாங்கறது.

இரண்டாம் சொக்கன் என்கிற பெயர் நிறைய பேருக்கு பிடித்திருக்கிறதாம்....உங்களுக்கு எப்படி?....கருத்துக்களை சொல்லலாம்.(ஹி..ஹி..இது வெளம்பரம்....)


சரி, இனி அடுத்த மேட்டருக்கு வருவோம்.....

நான் ஒன்னு சொன்னா யாரும் கோவிக்கப்டாது, அதென்ன எழுதினதுல பிடிச்சது, என் வரையில் பிடிச்சால் மட்டுமே எழுதினேன்..எழுதுறேன்...எழுதுவேன்.....அதுனால பிடிச்ச பதிவுன்னு பட்டியலிடாம சிலபதிவுகளை தொட்டுக்காட்டிச் செல்ல விரும்புகிறேன்.இதுல இன்னொரு சங்கடம் என்னன்னா, இதை எழுதுறதுக்காக நாம இது வரை நடந்துவந்த பாதையிலேயே திரும்பிசெல்ல வேண்டியிருக்கிறது. எனக்கு அதில் உடன்பாடில்லைதான், இருந்தாலும் நம்ம காட்டாறுக்காய்.....ஹி..ஹி...ம்ம்ம்ம்ம்

வலைபதிய வந்து இது மூன்றாம் ஆண்டு....என்னுடன் சமகாலத்தில் எழுதத்துவங்கிய பலரை இன்று காணவில்லை, எனக்கும் அடையாள்ங்களில் ஈர்ப்பு இல்லாததால் அவ்வப்போது என் அடையாளங்களை துறந்தே வந்திருக்கிறேன்....எனது முந்தைய வலைப்பூக்களின் கடவுச்சொல்லை கூட மறந்துவிட்டேன் என்பதுதான் உண்மை.

என்வரையில் இந்த தளம் எனக்கே எனக்கான சுதந்திரவெளி....தெரிந்தது தெரியாதது, விரும்பியது விரும்பாதது என என்னுடைய தேடல், பலம், பலவீனம், விகாரம் என அத்தனையும் குவித்துவைக்கும் ஒரு இடம் அவ்வளவே....

கொஞ்சம் ஓவரா பில்ட்டப் கொடுக்கிறேனோ.....

நான் வலைபதிய வந்த சமயத்தில்தான் அனானிகள் தலைதூக்க ஆரம்பித்திருந்தனர்.நான் அனானிகளை ரசித்தேன், ரசிக்கிறேன்...ஆனால் இன்றுவரை அனானியாய் பின்னூட்டம் போட்டதில்லை,அதற்கான தேவையும் வந்ததில்லை.ஒரு கட்டத்தில் பெரியவர் டோண்டு மற்றும் அவரை சார்ந்த சில பதிவர்களுக்கு பிரச்சினை வந்தபோது தமிழ்மணம் பின்னூட்ட மட்டுறுத்தலை கொணர்ந்தது. அதை மிகத்தீவிரமாய் எதிர்த்த வெகுசிலரில் நானும் ஒருவன்,இன்று வரை பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யாத ஒரே பதிவரும் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன்.

உண்மையில் நான் ஆத்திகனா?,இல்லை நாத்திகனா? என்பதில் எனக்கு இன்றளவும் குழப்பம் உண்டு, ஆனால் என்னுடைய கடந்தகாலத்தில் ஒரு தீவிரமான நாத்திகனாய் இருந்து பின் நீர்த்துப் போனவன் என்பதுதான் உண்மை.... அதே நேரத்தில் நான் கடவுள் என்பதை உணர்ந்திருக்கிறேன், நீங்களும் கடவுளாக முடியுமெனவும் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

இங்கே வலைப்பதிவில் இரண்டு பேருடன் சண்டைபிடித்திருக்கிறேன்....ஹி..ஹி...ச்ச்சும்மா, சண்டையெல்லாம் இல்லை,அவர்களின் பதிவின் மீதான எனது எரிச்சலை பதிந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்,மற்றபடி இருவருமே நான் மிகவும் மதிக்கும் சகபதிவர்கள். ஒருவர் சகோதரி லிவ்விங் ஸ்மைல், இன்னொருவர் உயிர்மை பதிப்பகத்தின் மனுஷ்யபுத்திரன்.இன்னிக்கு ரெண்டுபேருமே பெரிய ஆளுங்க, நிமிர்ந்து பார்க்க சந்தோஷமாயிருக்கிறது.

கண்ணகி தமிழ்பெண்ணே அல்ல என்றும், மஹாத்மா ஆறு கொலை முயற்சிகளுக்கு பின்னரே கொல்லப்பட் தகவல்,உலக மொழிகளில் கெட்டவார்த்தையில் திட்டுவது எப்படி என்றும், ஔரங்கசீப்பின் உயிலை வலைப்பதிவுக்கு தந்தவன் என ஏகப்பட்ட பெருமைகளை உடையவன் நான்...ஹி...ஹி...ம்ம்ம்ம்ம்!

குறிப்புகளை வைத்து ஒப்பேற்றிய பதிவுகள் என பார்த்தால் காலம் ,ராமாயணம் உண்மையா?,பொய்யா?......., சபரிமலை ஒரு பௌத்த/சமண மடம்?, இந்து,இஸ்லாமிய மதங்களின் ஆச்சர்ய்மான ஒற்றுமைகள் ,மறைந்து போன தமிழ் நூல்கள் போன்றவைகளும் உண்டு.

தொடர்கள் எழுத ஆரம்பிப்பதும், அப்புறம் பாதியிலேயே அதை மறந்துவிடுவதும்...உண்டு

தொடர்கள் என பார்த்தால்....ப்ளூபிலிம் , நானும் சாய்பாபாவும், ஸென் என இன்னும் சிலது இருக்கிறது....பாதியில் விட்ட தொடர்கள் திருமலையான் யார்?, மந்திரம் தந்திரம் யந்திரம்இது போக இன்னும் சிலதும் உண்டு.

நான் யார் என்கிற தேடல்களும் அதன் மீதான விவாதங்களும் அவ்வப்போது வரும், சமயங்களில் நானே கடவுள் என்கிற நினைப்புகளை கூட பதிந்திருக்கிறேன்.

விட்டால் பதிவு நீளமாகிவிடும்....காட்டாறு லைட்டா படங்காட்ட சொன்னாக...நான் கொஞ்சம் நீட்டி முழக்கீட்டேன்னு ஹி...ஹி....

சரி ஒரே மூச்சில் இவ்வளவு நீளமாய் பதிவெழுத அப்படி என்ன காரணம்னு சொல்றேன்னு சொன்னேன்ல....அது வந்து....இன்னிக்கு ஒரே நாள் பங்குசந்தை சரிவில் நான் இழந்தது 2,16,672 ரூபாயாக்கும். அதை கொண்டாடவே இந்த பதிவு....ஹி..ஹி...

அசரமாட்டம்ல......

Wednesday, January 16, 2008

பொன்மனசெம்மல் @ 92


மருதூர் கோபாலமேனன் ராமசந்திரனுக்கு இன்று 92ம் பிறந்தநாள்.நமக்கு முந்தைய தலைமுறையில் இந்த மனிதனின் தாக்கமில்லாத தமிழர்களை தேடி கண்டுபிடிக்கத்தான் வேண்டும்.

மறைந்து இருபது ஆண்டுகள் கழிந்திருந்தாலும், தமிழக அரசியலில் இந்த பெயருக்கு இருக்கும் மகத்தான சக்தியை நான் சொல்லித்தான் நீங்கள் அறியவேண்டியதில்லை....

இந்த நல்ல நாளில் ஏழைகளின் தெய்வம்,எங்கள் தங்கம், மக்கள் திலகம்,வாத்தியார்,சின்னவர், பொன்மனசெம்மல்,புரட்சித்தலைவர், பாரதரத்னா...டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களை நினைவு கூர்வோம்.

Wednesday, January 9, 2008

காட்டாறு கேட்டாக.....அதேன்..!

Sunday, January 6, 2008

சீட் பெல்ட் போடுங்கோ....இல்லாங்காட்டி...





Wednesday, January 2, 2008

அடிங்ஙொய்யால.....



மொக்கை...மொக்கை...மொக்கையை தவிர வேறில்லை