அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Friday, November 30, 2007

நம்ம ஸ்டைல்ல....ICL விளம்பரம்...



இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு போட்டியா ஜீ டிவி ஆரம்பிச்சிருக்கிற ICL நேற்று முதல் போட்டிய ஹரியானாவில் வெற்றிகரமா நடத்தீட்டாங்க....

விரைவில் நாடெங்கும் நடக்கும்னு சொல்லீருக்காங்க....

நம்ம ஆளுங்கள கவர் பண்ண நம்ம சூப்பர் ஸ்டார் ஸ்டைல்ல ஒரு விளம்பரம் வந்திருக்கு...பார்த்து எஞ்சாய் பண்ணுங்க....

சேரப்போறாங்களாமே...அப்படியா?

கடந்த சில தினங்களாய் சூரியன் எஃப் எம் மில் வரும் ஒரு விளம்பரம்.....

பிரிந்தவர்கள் சேரப்போறாங்க...

அப்படியா யாருங்க...?

ஓ அவங்களா..!


இந்த ரீதியில் ஒரு விளம்பரம் வந்து கொண்டிருக்கிறது...சரி எதுக்கோ பில்ட்டப் குடுக்கறாங்க போலன்னு நினைச்சிட்டு இருந்தேன்....

இன்னிக்கு காலையில திடீர்னு ஒரு யோசனை அதாவது...இரண்டு மூணு மாசமா ரூ.310 ல தள்ளாடிட்டு இருந்த சன் டிவியோட பங்ககுகள் கடந்த இரண்டு நாள்ல மட்டும் 15%க்கு மேல உயர்ந்திருக்கு....

ஏனுங்க தெரியாமத்தான் கேக்றேன்...ஏதும் காம்ப்ரமைஸ் ஆயிருப்பாங்களா....?

ஹி..ஹி..தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.....

Tuesday, November 27, 2007

மதுரைக்கு போகாதேடி.....



சமீப நாட்களில் அடிக்கடி கேட்கும் பாடல்..நான் தான் கேட்கிறேன் என்று நினைத்தால் சென்னை FM களில் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை இந்தபாடலை கேட்க முடிகிறது.

அழகிய தமிழ் மகனுக்காய்...A.R.ரஹ்மான் வார்த்தெடுத்த எங்க ஊர் பாட்டு இது...

அது என்ன எங்க ஊர் பாட்டுன்னு கேக்கறீங்களா...இந்த பாட்டில் பின்னனியில் வரும் தாளக்கட்டு...ஆதிய்ம் அந்தமுமாய் மதுரக்காரய்ங்களுகே உரித்தான பரம்பரை சொத்து....வாடிப்பட்டி செட் இந்த தாளத்தை வாசிக்கும் போது ஈரக்குலையே அதிரும்,சொல்லிப் புரியவைக்கமுடியாது அந்த அனுபவத்தை...அனுபவிக்கனுமய்யா...அதையெல்லாம்...ம்ம்ம்ம்

எனக்குத் தெரிந்து ரஹ்மான் முதல் தடவையா நாட்டுப்புற பாடலை அதற்கே உரித்தான காரம் மணம் குணத்தோடு தந்திருக்கிறார் என நினைக்கிறேன்.

கடந்த வாரம் இந்த பாடலோடுதான் மதுரை,திருச்சி, தஞ்சை என சுற்றினேன்.....இன்னும் சலிக்கவில்லை...

நீங்களும் கேட்டுப்பாருங்கள்......

Monday, November 26, 2007

Crying In The Rain



நமக்கும் இங்கிலிபீஸ் பாட்டுக்கும் கொள்ளை தூரம்...ஆனாலும் அப்பப்ப சில பாட்டு மனசுல தச்சிரும்...அந்த வகையில இந்த பாட்டும்...

இதை நினைவுபடுத்தற மாதிரி தமிழ்பாட்டு யாராவது சொன்னீங்கன்னா சந்தோஷப்படுவேன்....

Friday, November 23, 2007

சத்யசாய் @ 82



பசித்த வயிற்றில் உணவு தெய்வம்
பாலை வனத்தில் தண்ணீர் தெய்வம்
கொட்டும் மழையில் கூரை தெய்வம்
கோடை வெயிலில் நிழலே தெய்வம்...



பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் முடியும்
பயணம் முடிந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்....



பள்ளம்தான் மேட்டினை நிர்ணயிக்கிறது
குள்ளம் தான் உயரத்தினை வடிவமைக்கிறது
இல்லாததை இருப்பதுதான் காட்டுகிறது....

வெள்ளிவிழா ட்ரைவர்...!

தலைப்பு குறிப்பிடும் வெள்ளிவிழா ஆசாமி நாந்தேன்....ஆரம்பத்துலயே சொல்லீர்றேன்,இது ஒரு தற்பெருமை பதிவு...இதுக்கு மேல ரிஸ்க் எடுத்து படிக்கிறது உங்கபாடு.....

என்ன பண்றது எல்லாம் ஒரு வெளம்பரந்தான்.....ஹி..ஹி

மொத மொதலா வண்டி ஓட்ட ஆரம்பிச்சி இப்ப இருவத்தி அஞ்சு வருசமாச்சு..அதை கொண்டாடத்தான் இந்த பதிவு!

பண்ணிரெண்டு வயசுல ஏதோ தைரியத்துல அப்பாவோட அம்பாஸிடர ஸ்டார்ட் பண்ணி ஓட்றேன் பேர்வழின்னு காம்பவுண்ட் சுவர்ல மோதி சுவர் இடிஞ்சி, பூத்தொட்டியெல்லாம் நொறுங்கி, ஹெட்லைட் கண்ணாடி சுக்கல் சுக்கலாக, அதற்கு கொஞ்சமும் குறையாமல் அப்பாவினால் டின் கட்டப்பட்டதுதான் நமது அரங்கேற்றம்.

அன்னிக்கு ஆரம்பிச்ச கார் பித்து இன்னிக்கும் ப்ஃரெஷ்ஷா இருக்கு!...கொஞ்சம் கூட கொறயல...அன்னிக்கு அப்பா அடிச்சப்ப என்ன பெரிய்ய காரு, நான் பெரிய ஆளாகி நாலு கார் வாங்குவேன்னு அன்னிக்கு வச்ச வைராக்கியம்...ஹி..ஹி..இப்ப நிஜம்.

கார்களின் மீதான ஈர்ப்பு எப்போது எதனால் துவங்கியது என நினைவில்லை, ஆனால் கார்களை பற்றிய விவரங்களை சேகரித்து வைப்பதும், நண்பர்கள் மத்தியில் நுணுக்கங்களை வாய்கிழிய பேசி படங்காட்டுவதில் ஒரு போதை இருந்ததாகவே நினைத்தேன்....நினைக்கிறேன்.

முதல்முதலில் சொந்தமாய் கார்வாங்கிய போது எனக்கு சுத்தமாய் மகிழ்ச்சியே இல்லை, காரணம் சொன்னால் டென்சனாவீர்கள்....மொத மொதல்ல போயும் போயும் ஒரு சின்ன கார போய் வாங்கறோமேன்னு ரொம்பவே ஃபீல் பண்ணினேன்...

ஹி..ஹி..என்ன செய்றது அப்போதைக்கு மாருதி800 தான் ஒரே புதிய கார்...அப்புறம் ஆண்டொன்று போனால் வயதொன்று போவது மாதிரி கார்கள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன.

மறக்கமுடியாத சில கார் அனுபவங்களென்றால்....

வீட்டுக்குத்தெரியாமல் எத்தனையோ நாட்கள் கொடைக்கானலுக்கும், ராமேஸ்வரத்துக்கும் நண்பர்க்ளுடன் சுற்றிய நாட்கள்...எத்தனை பேர் தனுஷ்கோடியில் உள்ள ஆளரவமற்ற கடற்கரகளில் நடு இரவில் படுத்துக் கிடந்திருப்பிர்க்ள்....பேரிரைச்சலோடு பேய்த்தனமாய் வீசியெறியும் அந்த கடற்கரையில் பௌர்னமி இரவுகளில் பேசிக்களிக்கும் போது கூட தூரத்தில் சாலையில் தனியே நிற்கும் அந்த அம்பாஸிடரின் அழகு....

சென்னை மதுரைக்கு இடையில் எத்தனை முறை போய் வந்திருப்பேன் என கணக்கே இல்லை, நினைத்த மாத்திரத்தில் கிளம்பிவிடுவேன்,....அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் மருத்துவமனையில் அனுமதி என்கிற செய்தி கேட்டு வேறெந்த நினைவும் வராது மதுரைக்கு பறந்தது இன்றைக்கும் நம்பமுடியாத பயணம்,எப்படி போனேன் என இன்னமும் நினைவில்ல்லை...அம்மா..அம்மா...அம்மா மட்டுந்தான் நினைவில் இருந்தது. வெறும் ஆறு மணி நேரத்தில் மதுரையை அடைந்திருந்தேன்.

ஒரு காலத்தில் அதிதீவிரமாய் ச்சாட்டிக் கொண்டிருந்த காலத்தில் திருச்சியை சேர்ந்த ஒரு பெண் அமெரிக்காவில் செட்டிலானவர், நெம்ப க்ளோஸ்...ஹி..ஹி...திருச்சிக்கு போகும் போது எனக்காக கொஞ்சநேரம் பாலத்தில் வண்டியை நிறுத்தி நின்று அந்த காவிரிக் காற்றை ஸ்வாசித்து விட்டு போ என்கிற அன்புக்கட்டளை, இப்போது அவர் தொடர்பில்லாவிட்டாலும் ஆறேழு வருடங்களாய் அந்த தோழியில் ஏக்கத்தை நிறைவேற்றியே வந்திருக்கிறேன்...இனியும்.....

ஒரு முறை திருப்பூரில் தொழில் நிமித்தமாய் சுற்றிக்கொண்டிருந்த போது அப்போது புதிதாய் சந்தைக்கு வந்திருந்த மிட்சுபிஷி லான்சர் காரை வைத்துக்கொண்டு டெஸ்ட் ட்ரைவ் பண்ணச் சொல்லி இம்சை பண்ணிய விற்பனை பிரதிநிதியுடன் கோயமுத்தூர்வரை டெஸ்ட் ட்ரைவ் பண்ணி அவரை கதற்விட்டதும்.....பின்னர் அந்த வண்டியை டெலிவரி எடுத்தபோது அந்த மேளாளரிடம் என்ன செய்வீர்களோ தெரியாது, இந்த வண்டி விற்றதற்கான ஊக்கத் தொகை அந்த திருப்பூர்காரர்களுக்கு கிடைத்தாக வேண்டுமென அடம்பிடித்ததும்,ஊக்கத்தொகை கிடைத்ததை தொலைபேசியில் அவருடன் பேசி உறுதி செய்ததும் சந்தோஷத் தருணம்.

எத்தனை நாளைக்குத்தான் கார் ஓட்டுவது என எண்ணி ஆவடி HVFல் ஏலத்துக்கு வந்த ஒரு ராணுவ ஜீப்பை ஏலத்தில் எடுத்து நிறைய செலவு பண்ணி ஆறேழு மாதம் சுற்றியது ஒரு அனுபவம்.சும்மா சொல்லக் கூடாது அது குதிரை, வீட்டில் பலத்த எதிர்ப்பு வரவே விற்க வேண்டியதாயிற்று.

தெரிந்த ஒருவரிடம் இருந்த டிசைனர் ஜீப் இருந்தது, அதை எப்படியும் வாங்கிவிட வேண்டுமென ஆசைப்பட்டேன்...நடிகர் அஜீத் குமார் என் ஆசையில் மண்ணை போட்டார்...ஹி..ஹி...

என் அப்பாவுடன் காரில் போவது மட்டும் இன்றைக்கும் அலர்ஜியான விஷயம்...ஹி..ஹி..பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு ட்ரைவ் பண்ணுவார்....அதாவது ஏன் இந்த கியர்ல போறே,இப்படி ஓட்டு, எதுக்கு இத்தனை வேகம்..னு இம்சையாக்கிருவார்...இதுல பெரிய சோகம் என்னனா...யாராவது பொண்ணுங்க அவங்க பாட்டுக்கு போனாலும்...இவர்...டேய்..வேடிக்கை பார்க்காம நேர பார்த்து வண்டிய ஓட்டுன்னு மிரட்டுவார்....அவர் இப்படிச்சொல்லும் போது கார்ல இருக்கிற எல்லாரும் சிரிச்சிருவாங்க...எனக்கு பத்தீட்டு வரும்...ஹி..ஹி...

இப்படி நிறையவே பட்டியலிடலாம்....

சில அதிபயங்கர விபத்துக்களை சில அடி தூரத்தில் கண்டதும், துடிக்கத் துடிக்க உயிர் போவதை கையாலாகமல் பார்த்ததும் உண்டு. மயிரிழையில் மிக மோசமான விபத்துக்களில் இருந்து தப்பியியுமிருக்கிறேன். இருந்தாலும் காரோட்டுவது ஒரு வகையான தவமாகவே தெரிகிறது. தனியே காருக்குள் அது எனக்கான உலகம் என்கிற ஈர்ப்பும், அது தரும் நிறைவும் அனுபவித்தால் மட்டுமே புரியும் உணர்வுகள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலில் ஏற்பட்ட மிக மோசமான சரிவினால் கடன்களையும், கமிட்மெண்ட்களையும் தீர்க்க கையிலிருந்த எல்லாவற்றையும் விற்றுத் தீர்த்த நிலையில் காரை மட்டும் விற்க மனது வரவில்லை...ஒரு கட்டத்தில் காரையும் விற்றாக வேண்டிய சூழல்.... கவச குண்டலத்தை இழந்த கர்ணனை போல...என்னுடைய பலமெல்லாம் போய்விட்டதை போன்று உணர்ந்த நாளது.

மலிவான காரொன்றை வாங்கலாமென தீர்மானித்தாலும், செகண்ட் ஹேண்ட் கார் வாங்க மனமொப்பவில்லை....டாட்டா இண்டிகா வாங்கலாமென்றால் முன்பணம் கட்டக்கூட கையில் காசில்லை...பதினைந்து நாட்கள் ஆட்டோவில் காலந்தள்ளினேன்..என்னுடைய சுற்றமெல்லாம் ஆளுக்கு இரண்டு கார்களாவது வைத்திருந்தனர்....யாரும் என்னிடம் கேட்கவில்லை...நானும் யாரிடமும் போகவில்லை.

ஒரு வழியாய் பணம் புரட்டி 95% கடனில் டாட்டா இண்டிகாவை புக் பண்ணினேன். காரை டெலிவரி எடுக்கப் போக வேண்டும், கையில் ஆட்டோவிற்கு கூட காசில்லை....அதற்கு ஆறுமாதத்திற்கு முன்னால் 400க்கும் அதிகமானோர் பணிபுரிந்த நிறுவனத்தின் முதலாளி....கோடிக்கணக்கில் விற்றுவரவு செய்து கொண்டிருந்தவன்.முழுத் தொகையும் ஒரே செக்கில் கொடுத்து கார் வாங்கிய திமிரோடு இருந்தவன்.

ஹைகமாண்ட் கொடுத்த ஐநூறு ரூபாயுடன் டெலிவரி எடுக்க ஆட்டோவில் போன அந்த பயணம் வலிநிறைந்தது, என்றைக்கும் மறக்க்காது....அந்த பயணத்தின் போது தோன்றிய சிந்தனைகளே இன்றும் வழிநடத்துகிறது என நினைக்கிறேன்....இடறி விழுதல் யாருக்கு சாத்தியமே...இடறி விழுவதால் ஒரு போதும் சிங்கம் நரியாகிவிடாது....நான் இன்னமும் சிங்கம்தான்...நிதானித்து சிலிர்த்தெழ அவகாசமிருக்கிறது...இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை...இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டே போனேன்.

ஐந்து வருடங்கள் கழித்து இன்றைக்கு என்னிடம் நாலு கார்கள் இருக்கிறது....இது அதிகம்தான், தேவையில்லைதான்...ஆனாலும் ஒரு வெறி...என்னை நிரூபித்துக் காட்டிய வெறி....எனக்கு பிடித்ததற்காய் ஒரு டொயோட்டா இன்னோவாவும், ஹைகமாண்டுக்கு பிடித்த மாருதி ஸ்விஃப்ட், நம்ம ஜுனியர்க்கு பிடித்ததற்காய் ஒரு மாருதி வேகன் ஆர்...இது போக என் கஷ்டத்தில் கூட இருந்த என் இனிய டாட்டா இண்டிகா.

எனக்கு பெட்ரோல் கார்கள் சுத்தமாய் பிடிப்பதில்லை....அவையெல்லாம் பெண்கள் ஓட்டத்தான் லாயக்கு என நினைத்துக் கொண்டிருக்க்கிறேன்...டீசல் வண்டிகள்தான் Manlyயானவை, அவைதான் என் ஃபேவரைட்...குதிரை மாதிரி இருக்கவேண்டும்.என்னுடைய அனுபவத்தில் அத்தகைய உணர்வினை தந்த ஒரே வண்டி Opel Astraதான்....

அநேகமாய் இந்திய சந்தையில் உலாவரும் அத்தனை வண்டிகளையும் ஓட்டியாயிற்று,ஸ்கொடா மட்டுமே பாக்கி...

இப்போது அடுத்த கட்டமாய் வெளிநாட்டு கார்களை ருசிபார்க்கும் ஆவல் எட்டிப் பார்க்கிறது.அதே சமயத்தில் எத்தனை நாள்தான் அடுத்தவன் செய்யற கார்ல போறது, நம்ம கார நாமளே செஞ்சி ஓட்டணும்னு ஒரு ஆசை இருக்கு, சீக்கிரத்துல வேலை ஆரம்பிக்கணும் ...ஹி..ஹி...விடமாட்டம்ல....

(கொஞ்சம் ஓவராவே ஃபிலிம் காட்டீட்டேன்னு நினைக்கிறேன்...ஹி..ஹி...ஏதோ சின்ன பையன் தலைகால் தெரியாம‌ ஆடறான்னு பெரிய மனசோட மன்னிச்சிருங்க....)

Tuesday, November 20, 2007

பஹவான் ஸ்ரீராமசந்திரமூர்த்தி பற்றிய புதிய தகவல்கள்



பகவான் ஸ்ரீராமசந்திர மூர்த்தி அவர்களின் திரு அவதார தினம் ஜனவரி 10, 5114

பா.ஜ.க வின் குலதெய்வமான சக்கரவர்த்தி திருமகனார் தனது 39ம் வயதில் மஹாக்கேவலமான அரக்கர் குல அரசன் ராவணனை வீழ்த்தினார்.

இதெல்லாம் நான் சொல்லலீங்க...நம்ம சென்னையைச் சேர்ந்த திருவாளர் ஹரி என்பவர் ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடிச்சி அதை மும்பையில போய் வெளியிட்டிருக்கிறார்.

வெவரமா படிக்க இங்கன போங்க.....

Wednesday, November 7, 2007

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்....



.....திறமை கொண்ட தீமை யற்ற தொழிபு ரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி, ஞான மெய்தி வாழ்வ மிந்த நாட்டிலே
வாழி கல்வி செல்வ மெய்தி மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரு மொருநிகர் - சமான மாக வாழ்வமே.....
இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்........

Tuesday, November 6, 2007

இப்படியும் ஒரு மருத்துவம்....!

கொஞ்ச நாளைக்கு முன்னால இதயம் நல்லெண்ணை நிறுவனம் "ஆயில் புல்லிங்"(Oil Pulling) பத்தி விளம்பரம் செய்ததனை எத்தனை பேர் நினைவில் வைத்திருப்பீர்கள் என தெரியவில்லை. பண்டை தமிழர்கள் இதை செய்து நோய் நொடியின்றி வாழ்ந்ததாகவெல்லாம் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு தங்கள் நல்லெண்ணையை வாங்கி உயயோகிக்கும் படி கூறினர். அப்போது ஏதோ விளம்பர உத்தி என நினைத்தாலும் சமீபத்தில் அது குறித்த ஒரு தமிழ் புத்தகத்தை படிக்க நேர்ந்தது....புத்தகம் கிடைக்கும் முகவரி பதிவின் இறுதியில்....

காலையில் வெறும் வயிற்றில் இந்த எண்ணையை வாயில் ஊற்றி கொப்பளித்து துப்புவதுதான் ஆயில் புல்லிங்....இதனால் பல உடற்கோளாறுகள் தீர்வதாக இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். சாதாரண இருமல் சளி முதல் புற்றுநோய் வரை குணமாவதாக இந்த நூலின் ஆசிரியர் கூறுகிறார்.இந்த நூலின் ஆசிரியல் ஒரு மருத்துவர் எனவும் தனது பல நோயாளிளுக்கு இந்த சிகிச்சையின் மூலம் குணமளித்துள்ளதாக விரிவாக விளக்குகிறார்.

முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த டாக்டர்.மெத்கராஷ் என்பார் தனது நோயாளிகளுக்கு சூரிய காந்தி எண்ணணயை கொப்பளிக்க கொடுத்து பல நோய்களை குணமாக்கியதாக இந்த நூலாசிரியர் கூறுகிறார்.குறிப்பாக ஆஸ்த்மா நோயாளிகளுக்கு இது அருமருந்து என குறிப்பிடுகிறார்.

இந்த ஆயில் புல்லிங்கை எப்படி செய்யவேண்டுமென ஆசிரியரின் வரிகளையே தருகிறேன்....

....தூய்மை செய்யப்பட்ட்ட(ரிஃபைண்ட்) சூரியகாந்தி எண்ணையாவது, வேர்கடலை எண்ணையோ, நல்லெண்னையோ(எள் எண்ணை) இரண்டு தேக்கரண்டி அதாவது பத்து மில்லி லிட்டர் அளவிற்கு வாயில் விட்டுக்கொள்ளுங்கள்.ஆனால் விழுங்கி விடாதீர்கள்.பெரிதும் சிரமப்படாமல் அமைதியாக ஓய்வாக அதனை வாயில் சப்பியவாறு வாய் முழுவதும் கலந்து திரியும்படியாக கொப்பளியுங்கள்.தாடை சற்று உயர்த்தி இருக்கட்டும்.இடையில் பற்களின் இடைவெளிகளுக்கூடு செல்லுமாறும் கொப்பளியுங்கள்.தொண்டைக்குள் கொண்டு செல்ல வேண்டாம்.இப்படியே பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள்.முதலில் வாய் முழுவதும் வழவழவென்று உள்ளதைப்போல் காணப்படும்.சில நிமிடங்கள் கழித்துப் பின்னர் அது நீர்த்துப் போய் வாயினுள் எளிதாக நகர்கிறது. 15 நிமிட நேரத்தில் எண்ணை நுரைத்து வெண்மையாகி நீர்த்துப் போகிறது.அப்போது அதை உமிழ்ந்து விடுங்கள்.வெள்ளையாக இல்லாமல் எண்ணண மஞ்சளாக இருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும்.உமிழ்ந்து விட்ட பின்னர் வாய் கொஞ்சம் நுரைத்த வழவழப்புடன் உள்ளதைப் போல காணப்படும்.ஒன்றிரண்டு நிமிடங்கள் நுரையினை உமிழ்ந்து போக செய்து இரண்டாம் முறை உமிழுங்கள்.அப்படி உமிழ்ந்த பிறகு வாயை நான்கைந்து முறை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.பற்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.இதனால் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் கிருமிகள், கேடு விளைவிக்கும் பொருள்கள் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன......

இதை விடியற்காலையில் வெறும் வயிற்றில் பல் தேய்த்த பிறகு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்குமாம். அதிக பட்சம் தினமும் மூன்று தடவை செய்யலாமென்கிறார் இந்த நூலாசிரியர்.ஆனால் வயிறு காலியாக இருக்க வேண்டுமென வ்லியுறுத்துகிறார்.

நல்ல பலன் இருக்குமென அடித்துக் கூறுகிறார் நூலாசிரியர்....எளிய வைத்தியம் செய்து பார்க்கலாமே....

இனி நூலின் விவரங்கள்...

வியத்தகு எண்ணெய் மருத்துவம்
ஆசிரியர் - தூம்மல் கோட்டேசுவரராவ்
கிடைக்குமிடம்
செல்வி பதிப்பகம்
25,இரண்டாம் தெரு
லூர்து சாமி குடியிருப்பு
காசாமலை, திருச்சி-620023
தொலைபேசி:0431 - 2420568

Sunday, November 4, 2007

சிங்கத்தின் அறிக்கை...!

எங்கியாச்சும் சிங்கம் அறிக்கை விடுமான்னெல்லாம் அசட்டுத்தனமா கேக்கப்டாது. ஆனா இந்த அறிக்கையை சிங்கந்தான் விடுது...சரியா...யார் சிங்கம்னு இன்னேரம் புரிஞ்சிருக்கணுமே.....ஹி..ஹி..

என்னிய நானே சிங்கம்னு சொல்லிக்காட்டி வேற யாரு சொல்லுவா?....அதுனால மறுபடியும் நானே சொல்லிக்கறேன்...நான் சிங்கந்தான்...ஹி..ஹி...சரி, எதுக்கு இம்புட்டு பில்டப்னு தோணுமே.....தோணீருச்சா....வெளக்கமா அறிக்கைய படிங்க...

அதாகப்பட்டது கடந்த சில வருடங்களாய் தினமும் பதினெட்டு மணி நேரத்துக்கு மேல் உழைப்பதைப்(?) போல நடித்ததால்(!)...சிங்கத்துக்கு ரத்தக் கொதிப்பு வந்திருச்சி...கொஞ்ச நஞ்சமில்லை 110 - 150,... இம்புட்டு ச்சின்ன வய்சுல(?) இது ஆவாதாமே...நெம்பவே பயமுறுத்தீட்டாய்ங்க சிங்கத்த....

இனி சென்னை செந்தமிழ்....

பத்து நாளைக்கு முன்னால..அப்டிக்கா வள்ளுவர் கோட்டத்தாண்ட ட்ரைவ் பண்ணிகினு இருந்தப்ப...திடீர்னு பின் மண்டைல ஜிவ்வுனு சூடாகி உடம்பெல்லாம் ஒரு மாதிரி இறுக்கம் பரவி படபடப்பா..கண்ணெல்லாம் மங்கி...என்னாடா இது புது ஃபீலிங்கா இருக்கேன்னு நெனக்கச்சொல்ல...குப்புனு வேர்வை...ஆஹா ஹார்ட் அட்டாக்தான் வந்திருச்சோன்னு டவுட் ஆகி...சரி தங்கமணிய கூப்ட்டு மரண வாக்குமூலம் கொடுத்துரலாம்னு டிசைட் பண்ணி வண்டிய ஓரங்கட்டச்சொல்ல...ஸ்லோவா ரெக்கவர் ஆயிடுச்சி....

இருந்தாலும் ஹைகமாண்டு கைல ரிப்போர்ட் பண்ணீரலாம்னு கூப்டா அடுத்த பிஃப்டீன் மினிட்ஸ்ல பஸ்ல பிக்பாக்கட் அடிச்சவனை அள்ற மாதிரி தம்பியும், தங்கமணியும் நம்மள கொத்தா அள்ளீடாங்க....அந்த ஸ்பாட்லயே பிபி பார்த்துட்டு தங்கமணி டென்சனாயிருச்சி, மவனே சொன்னா கேக்கறியான்னு புலம்பீட்டே நாலஞ்சு மாத்திரைய கொடுத்து முழுங்கச்சொல்ல முழுங்கித் தொலைசேன்...அடுத்த ஒன் அவர்ல...ஈ.சி.ஜி...எக்கோன்னு என்னன்னவோ டெஸ்ட்...எல்லாம் நார்மலாத்தான் இருக்கு...பிபி மட்டுந்தான்னு தெரிஞ்ச்ப்புறந்தான் தங்கமணியோட பிபி நார்மலாச்சு.

அப்புறமென்ன..தங்கமணி நம்மள பேஷண்ட்னு டிக்ளெர் பண்ணி வூட்டுக்கு இட்டுகினு போய்டானுங்க....ரெண்டு மூணு நாளா மாத்திரைய முழுங்கறதும்...தூங்கறதும்...தங்கமணி பிபி பார்த்துட்டு கண்ணை உருட்டி மிரட்றதுமா பொழுது போச்சி.....லாப்டாப், செல்போன் எல்லாம் ச்சீஸ் பண்ணீடாய்ங்க...கம்ப்யூட்டர் பக்கம் போனா கம்ப்யூட்டர தூக்கி வெளிய எறிஞ்சிடுவேன்னு அன்பான அறுதல்கள்.....அதச் செய்யாதா...இதை செய்யாதேன்னு...ஜெயில் வார்டன் ரேஞ்சுக்கு இம்சை....நம்மோட மோசமான எதிரிக்கு கூட டாக்டர் பொண்டாட்டி கிடைக்கக் கூடாதுன்னு அப்ப சின்சியரா வேண்டிக்கிட்டேன்...ஹி..ஹி...

இருந்தாலும் சைக்கிள் கேப்ல நம்ம வர்த்தகப் பதிவுகளை மட்டும் தங்கமணிக்கு தெரியாம அப்டேட் பண்ணீட்டு இருந்தேன்....பிபி ஒரு வழியா நார்மலாக, ஒரு சுப வேளையில் கார்டியாலஜிஸ்ட் கிட்ட போனேன்(இழுத்துக் கொண்டு போனார்கள் என்பதுதான் உண்மை.). தங்கமணி அவருக்கு நிறைய கேஸ் ரெஃபர் பண்ணுவதால் ரொம்ப உரிமை எடுத்துக்கொண்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்(எரிச்சலாக்கினார்) என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள கடமைபட்டிருக்கிறேன்.(ஹி..ஹி..அறிக்கை)

தண்ணி அடிப்பியா?....தம் அடிப்பியா?...வாக்கிங் போறியா?..எக்ஸர்ஸைஸ் பண்ணுவியா?..ன்னு கேக்க கேக்க சமத்தா இல்லைன்னு தங்கமணி பதில் சொல்ல நான் மாடு மாதிரி தலையை ஆட்டி அமோதித்துக் கொண்டிருந்தேன்.ஒரு கட்டத்தில் கெட்ட பழக்கம் ஒன்னுமேயில்லையா?...நீங்க ர்ர்ரொம்ம்ப லக்கின்னு தங்கமணிக்கு ஐஸ் வைக்க தங்கமணிக்கு ஒரே பெருமை...அப்புறமா நம்ம வேலை விவகாரங்களை விசாரிக்க ஆரம்பிக்க..நாம நாலஞ்சி தொழிலை கட்டி மாரடிக்கறதை சொல்ல டாக்டர் பிரகாசமானார்.

ஸ்ட்ரெஸ்...ஸ்ட்ரெய்ன்...னு...ஆரம்பிச்சு ஒரு மினி லெக்சர்...ரொம்ப அக்கறையா இந்த காதுல வாங்கி அடுத்த காதுல விட்டுட்டிருந்தேன்.நீங்க ட்ரைவர் வச்சிருக்கீங்கள்ல...னு கேட்க,நான் ரொம்ம்ப பெருமையா செல்ப் ட்ரைவிங்கதான்னு...சொல்ல, தங்கமணியை டாக்டர் பார்க்க என் செல்ஃ ட்ரைவிங்க்கு அந்த இடத்தில் ஆப்பு வைக்க முடிவு செய்யப்பட்டது. அட்டோகார்-இ...கார்டேஸ்...டெல்சார்ட்டான்-ஹச் என வரிசையாக மாத்திரைகளை எழுதி ஒரு மாதம் கழித்து வந்து பார்க்கச்சொன்னார்.எல்லாம் இரவில் போட வேண்டும்.

ஒரு வழியாக எல்லாம் நார்மலாகி தங்கமணி வைத்த மிக கடுமையான ஃபிட்னஸ் டெஸ்ட்டில் பாஸாகி பொது வாழ்க்கைக்கு திரும்பிய இரண்டாவது நாளில் தவறுதலாய் இரண்டு டெல்சார்ட்டான் -ஹெச் மாத்திரைகளை முழுங்கித் தொலைக்க பங்குச்சந்தையைப் போல பிபி சரிந்தது...ஹி..ஹி..அதாவது 60-80...மறுபடியும் வீட்டுச்சிறையில்....இப்பத்தான் ரெண்டு நாளைக்கு முன்னால மீண்டும் பொதுவாழ்க்கைக்கு திரும்ப அனுமதிக்கப் பட்டேன் என்பதை கோடனகோடி(?) அன்பர்கள் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தெரிவித்த்துக் கொள்ள விரும்புகிறேன்.

வரும் நாட்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எழுத்துப் பணியில் தீவிரமாய் ஈடுபட உத்தேசித்திருக்கிறேன் என்கிற எச்சரிக்கையை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அறிக்கையை இன்னும் நல்லா எளுதீருக்கலாம்...ம்ம்ம்....அப்புறம் மொதல்ல சொன்ன சிங்கம் மேட்டர சீரியஸா எடுத்துக்காதீங்க....அரசியல்ல இதல்லாம் சஹஜமப்பா....கண்டுக்காதீங்க....

அல்லாரும் உடம்ப பாத்துக்கங்க...ப்ளீஸ்

Saturday, November 3, 2007

எப்டி இருந்த நமீதா...இப்ப.....ம்ஹும்


எப்படி இருந்த நமீதா....



இப்ப இப்படி இருக்கார்....

(ஹி..ஹி..பதிவு போட்டு நெம்ப நாளாச்சா....அதான் ஆரும் நம்மள மறந்துடக் கூடாதுன்னு இப்டிக்கா ஒரு அட்டெண்டன்ஸ்...ஹி..ஹி...வர்ட்டா....)