அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Monday, October 1, 2007

ஆண்மையா அரைவேக்காட்டுத்தனமா....

சேது சமுத்திர திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு துவக்கி வைக்கும் போது பின்னாளில் தங்களின் பிழைப்புக்கு வழிகோலும் பிரச்சினையாக மாறுமென மதவாத அரசியல் கட்சிகளும்(வாதிகளும்) கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

தங்களின் பாரம்பரியங்களை கட்டிகாப்பாற்றும் இவர்களுக்கு அமெரிக்க நாசா சொல்லும் வரையில் இந்த பாலம் இருந்ததே தெரியாது என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதற்கு முன்னர் வரை இவர்கள் இதை 'ஆடம்ஸ் ப்ரிட்ஜ்' என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தனர்.தரைக்கு கீழே ஓடும் சரஸ்வதி நதியை பற்றி எழுதிவைத்த புராணங்கள் இந்த பாலம் இந்த இடத்தில் மகாகணம் பொருந்திய ஸ்ரீமான் ராமச்சந்திர மூர்த்தியினால் கட்டப்பட்டது என குறித்து வைக்காமல் போனது மிக துர்பாக்கிய நிகழ்வு.

சற்றேறக்குறைய இரண்டாயிரம் கோடி ரூபாயை கடலில் கொட்டும் வரை பராக்கு பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு திடீரென மூக்கு வியர்த்து காவியும் கமண்டலமுமாய் கிளம்பி ராமேஸ்வரத்திற்கு கள்ள ரயிலேறி வந்து தங்களின் பக்தியையும் பண்பாட்டினையும் நிலைநிறுத்திச் சென்றவர்களுக்கு, இந்த பிரச்சினைதான் மீண்டும் தங்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தும் என தெரிந்ததும் பாலத்தை வைத்து குரங்கு வித்தை காட்டத் துவங்கியதும் அதை உசுப்பிவிடும் வகையில் நமது முதல்வரவர்கள் அரைவேக்காட்டுத் தனமாய் ஒரு கருத்தைச் சொல்லப் போக பிரச்சினை சுருசுருவென பற்றிக்கொண்டு விட்டது.

இந்த திட்டத்திற்காய் உடல்பொருள் ஆவியெல்லாம் தருவேன் என தமிழகமெங்கும் மேடையேறி அழுது புலம்பி ஆர்பாட்டம் செய்த 'வைக்கோ' நிச்சயமாய் அம்னீஷியாவினால் பாதிக்கப் பட்டிருக்க வேண்டுமென்பது என்னுடை தீர்மானமான கருத்து. இல்லையென்றால் இன்னேரம் துள்ளிக்குதித்து தெருவிற்கு வந்திருப்பார்தானே...நம்முடைய துரதிர்ஷ்டம் இலங்கை தமிழர்களுக்கு இடரென்றால்தான் அவரது தசையாடும் போலும்.

இந்த திட்டம் வந்தால் முதலில் பவழப்பாறை திட்டுக்கள் எல்லாம் அழிந்து போய் சுற்றுப்புற சூழல் மாசுபடுமென கவலைப்பட்டு இயற்கை ஆர்வலராய் அவதாரமெடுத்த நம்து முன்னாள் முதல்வர் அருமைத் தலைவி, பொன்மனச்செல்வி அம்மா அவர்கள் பின்னாளில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என சூளுரைத்த காண்டத்தை அநேகமாய் எல்லோரும் மறந்திருப்பீர்கள் என்கிற தைரியத்தில் இந்த வழியாக் கப்பல் போனால் செலவு கூடுமென பொருளாதார நிபுணராகி திட்டத்தை இப்போது எதிர்க்கிறார்.

குடும்பத்தில் குழப்பம், கூட்டணியில் குத்துவெட்டு வீட்டுக்குள் வேகத்தை காட்டமுடியாத தலைவர் தன் கோவத்தையும், எரிச்சலையும் சபையில் ராமர் மீதும், உச்சநீதிமன்றம் மீதும் காட்டி பிரச்சினைக்கு மேலும் தீ வார்க்கிறார்.

இயற்கையில் உருவான மணல் திட்டு என நிலவியல்,கடலியல் துறை வல்லுனர்கள் கூவிக்கூவி சொன்னாலும் எந்த மடையன் காதிலும் விழவில்லை. அவனவனுக்கு அவனவன் கஷ்டம்...அதை வெளியில் சொல்லமுடியாமல் கொள்கை, வெங்காயம், பண்பாடு என கூத்தடிக்கின்றனர்.

காண்ட்ராக்டர்களிடம் வாங்கிய கமிஷனுக்காய் ஒருவர், வருமானம் போய்விடுமே என்கிற அச்சத்தில் இலங்கையில் இருந்து வரும் நெருக்கடிக்கு விலை போய் கூச்சலிடும் ஒருவர்..எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை அவனுக்கு இரண்டு கண்ணும் போகவேண்டுமென நினைக்கும் புண்ணியவதி, மதத்தின் பெயரால் மக்களை மடையர்களாக்கி பதவி சுகம் காண நினைக்கும் இந்துத்வவியாதிகள்...இருக்கிற ஆட்சியதிகாரத்தை காப்பாற்ற எந்தளவும் கீழிறங்க தயாராக இருக்கும் ஆட்சியாளர்கள், இவர்களுக்கிடையில் முந்திரிக்கொட்டையாய் கருத்துச் சொல்லும் நீதிமான்கள்....

மொத்தத்தில் அனைவருக்கும் தங்கள் சொந்த லாபநஷ்டங்களே முன்னால் நிற்கின்றன. இதைத்தான் பொதுநலமென வாய்ஜாலமாய் விற்றுக்கொண்டிருக்கின்றனர். நாம் அரை வேக்காடுகளாய் ஆளுக்கொரு பக்கம் நின்று லாவனி பேசிக்கொண்டிருக்கிறோம்.

300 மீட்டர்/அடிக்கு ஒரு மணல் திட்டை அகற்றுவதால் தமிழகத்தில் ஆறு கடற்கரையோர மாவட்டங்களில் தொழில்வாய்ப்பும்,ராமேஸ்வரம்,தூத்துக்குடி,கடலூர் போன்ற துறைமுகங்களுக்கு நன்மையும் இதனால் அரசிற்கு கணிசமாய் வருவாயும், கப்பல்களுக்கு எரிபொருள் சேமிப்பும் வருவதை தங்கள் சொந்த ஆசாபாசங்களுக்காய் வீறுகொண்டெழுந்து வீதி நாடகம் போடும் இவர்களையா ஆண்மையாளர்கள் என்பது...அரைவேக்காடுகளா! விழித்துக் கொள்ளுங்கள்.

1 comments:

said...

பதிவிற்கு மிக்க நன்றி மாயாவி.

தமிழர்கள் இந்த அளவிற்கு தரமிழந்து கிடப்பார்கள் என்பதை நினைத்து பார்க்கவே மனம் கசக்கிறது.

இருந்தாலும் மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. மக்கள் மடையர்கள் இல்லை. பாதகர்களின் கூத்தாட்டங்களை, வெளி வேசங்களை, பகட்டுகளை நன்கு கவனித்து வருகிறார்கள். நேரம் வரும்போது தகுந்த தீர்ப்பளிப்பார்கள்.

இறுதியில் அவர்களின் தீர்ப்பே தீர்க்கமானதாகும்.

நம்பிக்கை கொள்வோம். மனம் தளராமல், அயராமல் பாடுபடுவோம். அநியாயங்களை அநீதிகளை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்போம்.

நம்மால் முடிந்தவரையில் சமூக நலத்திற்கு போராடுவோம். நிச்சயம் நம்பிக்கை வீண் போகாது. உண்மைக்கும் நேர்மைக்கும் என்றுமே அழிவு கிடையாது.

நன்றி.