இதுதான் கடைசிப் பதிவு....இதுவரை பெரிதாய் ஏதும் எழுதிவிடவில்லைதான், ஆனால் நிறைய அழுத்தங்களையும், ஆதங்கங்களையும் இறக்கிவைக்க இரண்டாம் சொக்கன் நிறையவே உதவியிருக்கிறான், அந்த வகையில் திருப்திதான்.
அடையாளங்களை உருவாக்குவதும் அதை தக்க வைப்பதும் கடினம்தான்...உழைப்பும்,ஒருங்கினைப்பும் இல்லையேல் அது சாத்தியமுமில்லைதான். ஆனால் உருவான அடையாளங்கள், ஒரு கட்டத்தில் அதன் எல்லைகளுக்குள் நம்மை தக்க வைக்க முயல்வதும், அதற்காய் வளைந்து கொடுப்பதும் எனக்கு இஷ்டமாயில்லை. அதன் பொருட்டே இந்த பதிவினை நிறைவு செய்கிறேன். என்னால் புதிய அடையாளங்களை உருவாக்கவும், அதனை உயர்த்திப் பிடிக்கவும் முடியுமென்கிற திமிரும் கூட காரணமாயிருக்கலாம்...ஹி..ஹி..ம்ம்ம்ம்ம், எது எப்படியோ போகட்டும்.
இரண்டாம் சொக்கன் என்கிற பெயர் கொஞ்சம் வித்தியாசமானதும், மனதுக்கு நெருக்கமானதாயும் இருந்தது. இந்த பெயருக்கு பின்னால் ஒரு சம்பவம் இருக்கிறது, இந்த இறுதிப் பதிவில் அதை சொல்லி முடிக்கிறேன்.
ஏற்கனவே மாயாவி என ஒரு பதிவர் இருப்பது தெரியாமல் இந்த பதிவிற்கு முதலில் வைத்த பெயர் மாயாவி என்பதே...அவர் வந்து சவுண்ட் விடவே, சொக்கன் என மாற்றினேன்,பார்த்தால் சொக்கர் ஏற்கனவே தமிழில் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்.
இதென்னடா பெயருக்கு வந்த சோதனை என்று நினைத்துக் கொண்டிருந்த பொழுதில் மதுரை போக வேண்டியிருந்தது...வழமை போல சொக்கருக்கும்,மீனாட்சிக்கும் அட்டெண்டன்ஸ் போட போனேன்.கோவிலில் சுற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு ஐடியா தோன்றியது, நாமளும் இத்தனை வருசமா சொக்கரோட க்ளோஸா சுத்தீட்டு இருக்கோமே, ஏன் நாம இரண்டாம் சொக்கன்னு பேர் வைச்சிக்க கூடாதுன்னு....
யார் வேணுன்னாலும் இரண்டாம்னு வச்சிக்க முடியுமா, அதுக்கு ஒரு தகுதி, தராதரம் வேணும்ல...படங்காட்றதுககாக பேர வைக்கப் போய், சொக்கர் கோவமாகி திருவிளையாடல் ஏதும் நடத்தீட்டார்னா நாம தாங்குவோமா, நாம வேற ஹாஃப் பாயில்ட் ஆ(நா)த்திகன்.
இப்படில்லாம் யோசிச்சிட்டே, சொக்கநாதர் சன்னிதி வந்தேன்...அவர்கிட்ட...பாஸ், நான் இரண்டாம் சொக்கன்னு பதிவுக்கு பேர் வச்சிக்கலாம்னு இருக்கேன், உங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருந்தா இப்பவே சொல்லீடுங்கோ, நீங்க கோவிச்சு, நான் டேமேஜாகாம இருக்கனும்னா, சீக்கிரமா ஒரு சிக்னல் குடுங்க நான் புரிஞ்சிக்கறேன்னு தாக்கல் சொல்லீட்டு சன்னிதி விட்டு வெளியே வந்தேன்.
அதோட அதை மறந்துட்டு எல்லாம் சுத்தீட்டு, கடைசியா மீனாட்சி சன்னிதி முன்னால இருக்கற பலிபீடம் முனால வந்து, பெரிசா ஒரு கும்புடு போட்டு...போய்ட்டு வாறேன் தாயீன்னு சொல்லீட்டு இருக்கும் போது திடீர்னு நம்ம தோளை ஒரு முரட்டு கரம் ஒன்னு இருக்கமா புடிச்சி திருப்பிச்சு...
எவண்டாது..ன்னு திரும்பினா அஞ்சடி ஒசரத்துல வறுமையை உடம்பிலும், உடையிலும் தேக்கிய வயதானவர் ஒருவர். நான் சுதாரிக்கறதுக்குள்ள என் கைக்குள்ள ஒரு கவரை திணிச்சு, அதிகாரமா...”இதுல ருத்ராட்சம் இருக்கு, உனக்குத்தான்...போட்டுக்க”ன்னு சொல்லீட்டு விடுவிடுன்னு நடந்து முக்குறுனி பிள்ளையார் சன்னிதி பக்கம் நடந்து போயிட்டார்.
எனக்கு ஒன்னுமே புரியலை, அந்த பெரியவர் பின்னால போய் பாக்கலாம்னு ரெண்டு அடி நடந்தேன், அப்புறம் ஒன்னுமே தோனாம தெப்பக்குளம் படிக்கட்டுல வந்து உக்காந்தேன்.அதி காலை நேரத்துல அந்த இடத்தில் வேற யாருமே இல்லை...அந்த கவரை பிரிச்சா உள்ளே புத்தம் புதுசான சிவப்பு கயித்துல கோர்த்த ஒரு ருத்ராட்சம் இருந்துச்சி.
ரொம்ப நேரம் ஒன்னும் புரியல, இந்த காலை நேரத்துல ஆளரவம் இல்லாத ஒரு சூழல்ல...என்னை வலுவா புடிச்சி என் கையில எதுக்கு திணிச்சுட்டு போகனும். அப்பத்தான் மண்டைக்குள்ள வெளக்கெறிஞ்சிச்சு...இரண்டாம் சொக்கனுக்கு ஓக்கேன்னு பாஸ் சொல்ல்ராறோன்னு. என்ன கொடுமையிது....ஹி..ஹி...
சரி இதையே சம்மதம்னு வச்சிக்குவம்னு மொத வெலையா இரண்டாம் சொக்கனை அரங்கேற்றியாச்சு...இப்ப இந்த பதிவோட அவரை ஏறக்கட்டியுமாச்சு...பாரம் குறைந்தது.
அந்த ருத்ராச்சத்தை ரொம்ம நாளாய் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தேன், ஒரு சுபநாளில் ஹைகமாண்ட் அதை பறிமுதல் செய்து ஒரு தங்கசங்கிலியில் கோர்த்து கொடுக்க.... இப்பொழுது அதை உருட்டிக் கொண்டே இந்த பதிவினை நிறைவு செய்கிறேன்.
முக்கிய அறிவிப்பு: இனிமேற்கொண்டு இரண்டாம் சொக்கன் என்கிற பெயரில் பின்னூட்டங்கள் வந்தால் அனுமதிக்க வேண்டாம். மீறி அனுமதித்தால் அதற்கு நானே, முதலாம் சொக்கரோ எந்த வகையில் பொறுப்பாக மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்பால, இன்னொரு மேட்டர், ஆரும்...பதிவ விட்டு போவாதே, தொடர்ந்து எளுதளைன்னா உண்ணாவிரதம் இருப்பேன், மறியல் பன்ணுவேன்னலாம் ஆர்ப்பாட்டம் பண்ணி அளுவாச்சி காட்டக்கூடாது. உங்களையெல்லாம் விட்டுட்டு நான் எங்கன போயிரப்போறேன், எனக்கு வேற யார் இருக்கா....எனக்கே அளுவாச்சியா வருது...ஹி..ஹி...முடிச்சிக்கறேன்
அறிந்தறிந்து விடுவது ஞானம்
அறிந்தறிந்து கொள்வது ஞானம்
அறிந்தறிந்து அறிவது ஞானம்
அறிந்தறிந்து தெளிவது ஞானம்
அறிவ தெங்கே அறிந்த தெங்கே?
Sunday, July 6, 2008
Subscribe to:
Posts (Atom)